
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது மீண்டும் பேட்டிங்கில் சோபிக்க தவறியது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் சூஸி பேட்ஸ் 16 ரன்களுக்கும், பிளிம்மெர் 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சோஃபி டிவ்வைன் 5 ரன்களுக்கும், ஹாலிடே 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மேடு கிரீன் 25 ரன்களையும், இசபெல்லா காஸ் 25 ரன்களையும் சேர்க்க, நியூசிலாந்து மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்க்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாரா கிளென் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலந்து மகளிர் அணிக்கு வழக்கம் போல் டேனியல் வையட் மற்றும் சோபியா டங்க்லி இணை சிறப்பன தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்திருந்த சோபியா டங்க்லி தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அலிச் கேப்ஸியும் 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.