
மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 2ஆவது வாரத்தைக் கடந்து ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்து வருகிறது. இந்த வருடம் இதுவரை 20+ போட்டிகளை நடைபெற்றாலும் அதில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளும் கடைசி ஓவர் வரை சென்று பல பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராடி வருகின்றன.
இந்த வருடம் ராஜஸ்தான், பெங்களூரு ஏன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ, குஜராத் போன்ற அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் வெற்றி நடை போடுகின்றன. ஆனால் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளிப் பட்டியலில் அடிபாகத்தில் திண்டாடுகின்றன.
அதிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் என சரித்திர சாதனை படைத்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில் தவிக்கிறது. அந்த அணியில் பேட்டிங்கில் இசான் கிசான், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களால் பேட்டிங் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சு படு மோசமாக இருப்பது அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய பங்காற்றியது.