
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் நிலையில் மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் இல்லாததும் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. உலகக் கோப்பையை வெல்வது என்பது மிகப் பெரிய கனவு. உலகக் கோப்பையை வெல்வதைக் காட்டிலும் வேறு விஷயங்கள் எதுவும் எனக்கு அதைவிட மகிழ்ச்சியை தரப் போவதில்லை. உலகக் கோப்பையை நீங்கள் எளிதில் வென்றுவிட முடியாது. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
நாங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அணியில் உள்ள அனைவரும் உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஏனென்றால், எங்களிடம் சிறந்த அணி இருக்கிறது. நாங்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். எங்களிடம் உள்ள நம்பிக்கை மற்றும் உறுதி எங்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கிறது. உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றால் அதனை நாங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்தபோது, நாங்கள் உலகக் கோப்பைக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினேன்.