
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டான ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் தலைமையின் கீழ் சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட இருந்த வேளையில் மீண்டும் அணியின் கேப்டனாக தோனியே பதவி ஏற்றார்.
இப்படி தனக்கு வழங்கப்பட்ட பதவியை மீண்டும் அணியின் நிர்வாகம் பறித்ததால் அதனால் அதிருப்தி அடைந்த ஜடேஜா சென்னை அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காயத்தை காரணம் காட்டி அந்த தொடரின் இறுதியில் அணியில் இருந்தே வெளியேறியிருந்தார். அதனை தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்திலும் சென்னை அணியை பின் தொடர்வதை தவிர்த்த ஜடேஜா சென்னை அணியுடன் தான் இருந்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார்.
இதன் காரணமாக அவர் சென்னை அணியில் இருந்து வெளியேறுகிறார் என்றும் குஜராத் அணிக்காக இனி அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளத்தில் உலா வந்தன. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோனி கேட்டுக்கொண்டதன் பேரில் ஜடேஜா இந்த ஆண்டு சென்னை அணியில் நீடிக்கிறார் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.