ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸின் கேப்டனான டூ பிளெசிஸ் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் விளையாடும் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில், புதிய டி20 லீக் தொடரை நடத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இந்த தொடர் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் 6 அணிகள் விளையாடுகின்றன. அந்த 6 அணிகளையும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தான் வாங்கியுள்ளனர்.
அதில் ஜோஹன்னஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தான் வாங்கியுள்ளது. எனவே அந்த அணிக்கு ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயரிடப்பட்டு, சிஎஸ்கே அணியில் ஆடும்/ஆடிய சிஎஸ்கே அணியின் ஆஸ்தான வீரர்களை ஜோஹன்னஸ்பர்க் அணியில் எடுத்துள்ளது.
Trending
ஒவ்வொரு அணியும் ஆரம்பக்கட்டமாக 5 வீரர்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்காக அபரிமிதமான பங்களிப்பு செய்து சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஃபாஃப் டுப்ளெசிஸை எடுத்து அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது.
டுப்ளெசிஸ் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என ஏற்கனவே தகவல் வெளிவந்திருந்த நிலையில் இன்றைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக காலங்காலமாக இருந்துவரும் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தான் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபாஃப் டுப்ளெசிஸ் ஐபிஎல்லில் 2011லிருந்து 2021 வரை (சிஎஸ்கே தடைபெற்ற 2 சீசன்களை தவிர) சிஎஸ்கே அணியில் ஆடினார். சிஎஸ்கே அணியின் ஆஸ்தான வீரரான டுப்ளெசிஸை 2022 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் எடுக்க முடியாமல் போனது. 2022 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டனாக டுப்ளெசிஸ் ஆடினார் ஐபிஎல்லில் அடுத்த சீசனிலும் ஆர்சிபி அணியில் தான் ஆடுவார். ஐபிஎல்லில் தவறவிட்டாலும், தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் சூப்பர் கிங்ஸ் அணி டுப்ளெசிஸை எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது.
டுப்ளெசிஸுடன், மொயின் அலி, மஹீஷ் தீக்ஷனா, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெஃபெர்டு, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரான ஜெரால்டு கோயட்ஸீ ஆகியோரும் ஜோஹன்னஸ்பர்க் அணியில் இடம்பெற்றுள்ளனர்
Win Big, Make Your Cricket Tales Now