
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் நேற்று தொடங்கியது.
அதன்படி ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - சாட் பௌஸ் இணை களமிறங்கியது. இதில் சாட் பௌஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, இயடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங்கும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெரில் மிட்செல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.