
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 27ஆவது லீக் போட்டியானது இன்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 81 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 109 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 389 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரச்சின் ரவீந்திராவின் மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக முன்னேறி வந்தது. அவரோடு டேரல் மிட்சல், டாம் லேதம், ஜிம்மி நீஷம் என அனைவருமே கை கொடுக்க இறுதி கட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணி அவர்களை மிகச் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தது.