
MLC 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய ஃபின் ஆலன் 51 பந்துகளில் 5 பவுண்டரி, 19 சிக்ஸர்களுடன் 151 ரன்களைக் குவித்து மிரட்டியுள்ளார்.
எம்எல்சி என்றழைக்கப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணிக்கு டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டிம் செய்ஃபெர்ட் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய ஃபிரேசர் மெக்குர்கும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்த ஃபின் ஆலன் 34 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். அவருடன் இணைந்து சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஃபின் ஆலனும் 5 பவுண்டரிகள், 19 சிக்ஸர்களுடன் 151 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.