
தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக கடைசி கட்ட நேரத்தில் ஓவரின் 6 பந்துகளையும் மிகத் துல்லியமான “யார்கர்” பந்துகளாக வீசும் இவரின் திறமை பலரையும் திரும்பிப்பார்க்க வைத்ததுடன் பாராட்டுகளையும் பெற்று தந்தது.
இதன் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்கு தேடி வந்தது. சொல்லப்போனால் அந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நெட் பந்து வீச்சாளராக இடம் பிடித்திருந்த நடராஜனுக்கு ஒரு முக்கிய பந்துவீச்சாளர் காயம் அடைந்த காரணத்தால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்காக களமிறங்கிய நடராஜன் அதன்பின் ஒருநாள் தொடரிலும் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். கிடைத்த வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திய அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய போதிலும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்ற துவங்கினார்.