
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த சுனில் நரைன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் 84 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் விக்கெட்டை இழக்க, 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய் ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும், ரிங்கு சிங் 26 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.