
நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்டுகள், 215 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் கிறிஸ் கேர்ன்ஸ் விளையாடியுள்ளார். 1989-ல் அறிமுகமாகி, 2006 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட கேர்ன்ஸ், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். 2010-ல் திருமணம் ஆன பிறகு ஆஸ்திரேலியாவிலுள்ள கேன்பராவில் தனது குடும்பத்தினருடன் பல வருடங்களாக வாழ்ந்துள்ளார்.
கிறிஸ் கேர்ன்ஸுக்குக் கடந்த வருட ஆகஸ்ட் மாதம் கான்பெர்ராவில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பிறகு, கிறிஸ் கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.
அறுவைச் சிகிச்சையின்போது கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டன. முதுகுத்தண்டில் ஸ்டிரோக் ஏற்பட்டதால் அவருடைய கால்கள் செயலிழந்து விட்டன. தற்போது கான்பெர்ராவில் உள்ள மருத்துவமனையில் கேர்ன்ஸுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது என கேர்ன்ஸின் வழக்கறிஞர் ஆரோன் லாயிட், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கை வெளியிட்டார்.