
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது புனே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே இஷான் கிஷன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஹார்டிக் பாண்டியா, தீபக் ஹூடா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் இலங்கை அணியிடம் எளிதாக வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது அதிரடி காரணமாக ஓரளவு இந்திய அணி சரிவில் இருந்து மீண்டதோடு இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு கவுரவமான தோல்வியை சந்தித்தது.