
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் இரண்டு முறை நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ், இன்று தனது கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான நாளை பதிவு செய்தது. தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வரும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் சூப்பர் சிக்ஸ் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய மூன்று அணிகளும் இந்தச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்தச் சுற்றில் ஒரு பிரிவில் உள்ள மூன்று அணிகள் இன்னொரு பிரிவில் உள்ள மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். மேலும் தங்களுடைய பிரிவில் இருந்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த அணிகளில் எந்த அணியையாவது வென்று இருந்தால், அந்த புள்ளியும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் அந்த அணிக்கு கிடைக்கும்.
இதன் அடிப்படையில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் தங்கள் பிரிவில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த இரண்டு அணிகளையும் வென்று இருந்த காரணத்தால் 4 புள்ளிகள் ஏற்கனவே அவர்கள் கைவசம் இருந்தது. மேலும் இந்தச் சுற்றில் தங்களது முதல் ஆட்டத்தில் வென்றதால் அவர்கள் 6 புள்ளிகள் உடன் வலிமையாக இருந்தார்கள்.