
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று சூரத் நகரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை தோற்கடித்த கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் ஸ்ரீசாந்த் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தன்னுடைய அணிக்கு கேப்டனாக களமிறங்கிய கம்பீர் ஆரம்பத்திலேயே ஸ்ரீசாந்த் வீசிய சில பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்தார்.
அப்போது பெரும்பாலான பவுலர்களைப் போலவே வெறுப்பான ஸ்ரீசாந்த் அவரை பார்த்து முறைத்ததாக தெரிகிறது. மறுபுறம் கௌதம் கம்பீர் தம்மை முறைத்த ஸ்ரீசாந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து நடுவர்களும் சக வீரர்களும் உள்ளே புகுந்து சமாதானம் செய்தார்கள். இதனால் ஏமாற்றமடைந்த ஸ்ரீசாந்த் களத்தில் சொல்லக்கூடாத வார்த்தைகளால் தம்மை கௌதம் கம்பீர் திட்டியதாக போட்டியின் முடிவில் கூறினார்.