இஷான் கிஷானை விமர்சித்த கௌதம் கம்பீர்!
நியூசிலாந்துடனான 2ஆவது டி20ஐ இந்திய அணி கைப்பற்றிய சூழலில் ஓப்பனிங் வீரர் இஷான் கிஷானுக்கு நிறைய விஷயங்கள் தெரியவே இல்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமநிலை ஆனது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போதும், தொடக்க வீரர்களின் சொதப்பல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இஷான் கிஷான் மோசமாக தடுமாறுகிறார். வங்கதேசத்துடன் இரட்டை சதம் அடித்த இஷானுக்கு நியூசிலாந்து தொடரிலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர் எதையுமே பயன்படுத்திக் கொள்ளவில்லை.
Trending
முதல் டி20 போட்டியில் 5 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே அடித்து பிரேஸ்வெல்லிடம் அவுட்டானார். 2வது போட்டியில் ஸ்பின் பவுலிங்கை பேட்டிங்கில் கூட தொட முடியாமல் திணறினார். இறுதியில் 19 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். இஷானிடம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூழலில் அவரால் கொஞ்சம் கூட சோபிக்க முடியவில்லை.
இந்நிலையில் இஷானை கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். அதில், “களத்தில் சிக்ஸர்களை விளாசுவது சுலபம். ஆனால் தொடர்ச்சியாக ஸ்டரைக்கை ரொட்டேட் செய்வது கடினமான விஷயமாகும். ஸ்பின்னர்களின் அட்டாக்கில் இந்திய வீரர்கள் திணறுவதை பார்த்தேன். குறிப்பாக பிரேஸ்வெல்லை பார்த்து இஷான் கிஷான் தடுமாறியதே சரியான உதாரணமாகும்.
இஷான் போன்ற இளம் வீரர்கள் எப்படி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய வேண்டும் என்பதை வெகு சீக்கிரமாக கற்றுக்கொண்டே தீர வேண்டும். ஏனென்றால் லக்னோ போன்ற களங்களில் தூக்கி தூக்கி சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினமானது ஆகும். வங்கதேசத்துடன் இரட்டை சதம் அடித்தவுடன் இஷான் ஆடும் முறையை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. அவர் அடித்த ரன்களும், ஸ்ட்ரைக் ரேட்டுமே அவர் எவ்வளவு மோசமாக உள்ளார் என்பதை உணர்த்தும்.
ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாட இஷான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இஷான் நன்றாக உள்ளார். ஆனால் ஸ்பின்னர்களிடம் தான் தவறு செய்கிறார். எனவே டி20 கிரிக்கெட்டில் அவர் அதையும் கற்றுக்கொண்டால் மட்டுமே நல்லது, இல்லையென்றால் விளைவு தவறாக இருக்கும்” என கம்பீர் எச்சரித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now