பாகிஸ்தானை வீழ்த்த இதனை செய்தாலே போதும் - கவுதம் காம்பீர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருக்கும் பலவீனத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் சுட்டி காட்டி பேசியுள்ளார்.
டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி துவங்கிய இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டிகள் நாளை முதல் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
Trending
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், பாகிஸ்தான் அணியில் இருக்கும் பலவீனங்களை சுட்டி காட்டி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய கம்பீர் , “பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் அசுரபலத்துடன் உள்ளதை யாரும் மறுக்கவே முடியாது. மற்ற அனைத்து அணிகளையும் விட பாகிஸ்தான் அணியே பந்துவீச்சில் முழு பலத்துடன் உள்ளது. பாகிஸ்தான் அணியில் மட்டுமே 140+ வேகத்தில் பந்துவீசக்கூடிய மூன்று பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் ஒருவர் மட்டுமே அசுரவேகத்தில் பந்துவீசுவார்.
அதே போல் இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டால் 140+ வேகத்தில் வீச முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் நசீம் ஷா என மூன்று வீரர்களாலும் 140+ வேகத்தில் அசால்டாக பந்துவீச முடியும். இது பாகிஸ்தான் அணியின் மிகப்பெரும் பலம். அதேவேளையில், மறுபுறம் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரையும் நாம் கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் அவ்வளவு வலுவானதாக இல்லை.
குறிப்பாக மிடில் ஆர்டர் மிக மோசம். பாபர் அசாமின் விக்கெட்டை விரைவாக வீழ்த்திவிட்டால் அது பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த திட்டங்களையும் கெடுத்துவிடும். எனவே இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியின் இந்த பலவீனத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்கள் பெரியது, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் இலகுவாக சிக்ஸர்கள் அடிக்க முடியாது, எனவே ஷார்ட் பிட்ச் பந்துகள் அதிகம் வீசினால் பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டை இலகுவாக வீழ்த்த முடியும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now