பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்றில் நடைபெற்ற போட்டி கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சர்வதேச ரசிகர்கள் பலரும் சோகமடைந்தனர். மிகச்சிறந்த போட்டியாக வந்திருக்க வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், பாதியில் முடிவடைய காரணமான பிசிசிஐ மீதும் விமர்சனங்களும் அதிகரித்தன.
இருப்பினும் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு பலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் புரிய வந்தது. ஷாகின் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகிய மூவரும் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்தது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் தயாராக வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினர்.
Trending
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சு அட்டாக்கை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் முன்னிலையில் இருந்தன. ஏனென்றால் பாகிஸ்தான் அணியில் டாப் கிளாஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தற்போதைய சூழலில், பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் அணியில் இடதுகை பந்துவீச்சாளர்கள், வலதுகை வேகப்பந்துவீச்சாளர்கள், அதிக வேகத்தில் வீசக் கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். உலகின் எந்த பேட்ஸ்மேனும் பாகிஸ்தான் பவுலிங்கிற்கு எதிராக அவ்வளவு எளிதாக அட்டாக் செய்திட முடியாது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ராவுஃப் 9 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 7 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். இதனால் பாகிஸ்தான் பவுலர்கள் குறித்த அச்சம் இந்திய அணி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now