
இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 – 11ஆம் தேதி வரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டி நடைபெறுகிறது. வரலாற்றின் 2ஆவது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் அப்போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதுகின்றன. அதில் கடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் நழுவ விட்ட கோப்பையை இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.
முன்னதாக இப்போட்டி நடைபெறும் இங்கிலாந்தில் பெரும்பாலும் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணியினர் தடுமாற்றமாக செயல்படுவது வழக்கமாகும். எனவே முன்கூட்டியே பயணித்து அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டு தேவையான பயிற்சிகளை எடுத்து தயாராக களமிறங்குவதே இங்கிலாந்தில் வெற்றி காண்பதற்கான வழியாகும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த முறை 2 மாதம் முன்னதாகவே இங்கிலாந்துக்கு பயணித்து இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வெற்றி பெற்ற கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முழுமையாக தயாராகி இறுதிப்போட்டியில் களமிறங்கியது. மறுபுறம் 10 நாட்கள் முன்பாக பயணித்து வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு நேரடியாக இறுதிப்போட்டியில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இம்முறையும் ஐபிஎல் தொடர் நடைபெற்றதால் 10 நாட்களுக்கு முன்பாக மட்டுமே இந்திய அணியினர் இங்கிலாந்து சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.