
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களின் ஒன்றான ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்றுடன் நிறைவு பெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் சோமர்செட் மற்றும் கிளாமோர்கன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சோமர்செட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கிளாமோர்கன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கிளாமோர்கன் அணியில் கேப்டன் கிரன் கார்ல்சன் ஒரு ரன்னில் நடையைக்கட்ட, அடுத்து களமிறங்கிய தாமஸ் பெவனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான வில்லியமும் 28 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய சாம் நார்த்ஈஸ்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் விளையாடிய காலின் இங்ரம் 11 ரன்களுக்கும், பில்லி ரூட் 39 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் நார்த்ஈஸ்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 63 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய வான் டெர் கௌடென் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கிளாமோர்கன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது.