-lg1-mdl.jpg)
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்த நிலையில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் கல்வின் சாவெஜ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வாஷிங்டன் அணி தரப்பில் ரச்சின் ரவிந்திரா 4 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.