
மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியை பதிவு செய்தது புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
புனே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் போராடி 144/8 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு ஜோஸ் பட்லர் 8 (9) தேவ்தூத் படிக்கள் 7 (7) போன்ற நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக தனி ஒருவனை போல் போராடிய இளம் வீரர் ரியான் பராக் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 56* (31) ரன்கள் எடுத்து காப்பாற்றினார்.
இதையடுத்து ராஜஸ்தானின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு வெறும் 115 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. இதனால் பங்கேற்ற 9 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.