
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதேசமயம் இம்முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணியானது எலிமினேட்டார் சுற்றுடன் வெளியேறி மீண்டும் ஏமாற்றமளித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்னரே கேஎல் ராகுலை ஒப்பந்தம் செய்வதுடன், அவரை அணியின் புதிய கேப்டனாகவும் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு இம்முறை வீரர்கள் ஏலத்தில் சிறப்பாக செயல்படவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவ்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல் அந்த அணியில் இருந்து விலகியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் கிளென் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்பாலோவ் செய்ததன் காரணமாக, அவர் அந்த அணியில் இருந்து விலகியுள்ளதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.