
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாக்கூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் கேன் வில்லியம்சன் 58 ரன்களையும், டேரில் மிட்செல் 81 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காம்ரன் குலாம், முகமது ரிஸ்வான் ஆகியோரும் சோபிக்க தவறினர். அதேசயம் தொடக்க வீரராக களமிறங்கிய ஃபகர் ஸமான் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்தார்.