
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி கடைசி ஓவர் வரை சென்று விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் 95 ரன்கள், சாம்சன் 66 ரன்கள் அடித்து கொடுக்க 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.
இந்த இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் அன்மோல்பிரீத் சிங் இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டர் கிளாஸன் மற்றும் கிளீன் பிலிப்ஸ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி கிட்டத்தட்ட இலக்கை நெருங்க உதவினர். குறிப்பாக போட்டியின் 19 ஓவரில் கிளென் பிலிப்ஸ் 22 ரன்கள் குவித்து மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இருந்தபோது, கடைசி ஓவர் கடைசி பந்தில் நோ-பால் வீசி சந்தீப் சர்மா டிவிஸ்ட் கொடுக்க, அப்துல் சமாத் அதை பயன்படுத்தி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இறுதியாக, ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 7 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டத்தை ஹைதராபாத் அணியின் பக்கம் திருப்பிய கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.