
மூன்றாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 2 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 62 ரன்களைக் குவித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஜெஸ் ஜோனசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடியா டெல்லி அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 56 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகாள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களில் ஆல் அவுட்டானது.
யுபி வாரியர்ஸ் தரப்பில் கிராந்தி கவுட் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆல்-ரவுண்டர்கள் கிரேஸ் ஹாரிஸ் - சினெல்லே ஹென்றி ஆகியோர் சாதனைகளை படைத்தனர்.