
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வில் இருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்திய அணியான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வேளையில் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அவர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் முதன்முறையாக இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 24 வயதே ஆன இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வழிநடத்தி உள்ள அனுபவம் இருப்பதனாலும், இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படுவதாலும் இம்முறை அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் 211 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்வியினால் அவரது கேப்டன்சி மீது பெரிய விமர்சனம் ஏற்பட்டுள்ளது. அதாவது முக்கிய நேரத்தில் சரியான பவுலர்களை அவர் முறையாக பயன்படுத்தவில்லை என்றும் ஏகப்பட்ட முடிவுகளில் அவர் குழப்பத்தை ஏற்படுத்தியதாலும் இந்த தோல்வி கிடைத்தது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் ரிஷப் பந்தின் கேப்டன்சி குறித்து விமர்சித்து வருகின்றனர். அதேபோன்று ரிஷப் பந்தின் கேப்டன்சி சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வளவு சிறப்பாக அமையாது என்றும் பலரும் கூறிவருகின்றனர்.