
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியும், பேட்டிங்கில் கடுமயாக திணறி, கடும் முயற்சிக்கு பிறகு கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இரு அணிகளுமே 100 ரன்கள் எடுப்பதற்கு மிக கடுமையாக திணறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளத்தின் தன்மையை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.