
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் - கேப்டன் பெத் மூனி இணை முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இருவரும் பந்தை தூக்கி அடிப்பதற்கு பதிலாக, பந்திற்கு ஏற்றவாறு தங்கள் ஷாட்டுகளை விளாட இந்த இருவரது பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்துடன் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். அதன்பின் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 45 பந்துகளில் 13 பவுண்டரிகளை அடித்து 76 ரன்கள் எடுத்த நிலையில் நூலிழையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.