
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் சர்வதேச போட்டிகள் காரணமாக தாயகம் திரும்பியுள்ளார். இதன் காரணமாக அவர் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகிவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸின் முதுகெழும்பாக செயல்பட்ட பட்லர் விளையாடாதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.