
தனுஷ்கா குணதிலகா இலங்கை அணிக்காக 8 டெஸ்டுகள், 44 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் இங்கிலாந்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் முதல் தேர்வாக இருக்கும் மூவரும் இலங்கை கிரிக்கெட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்து இங்கிலாந்திலிருந்து வெளியேற்றியது இலங்கை கிரிக்கெட் வாரியம். மூவரும் விமானத்தில் இலங்கைக்குத் திரும்பினார்கள். பிறகு மூவரும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
மூவருக்கும் விதிக்கப்பட்ட ஓர் ஆண்டு தண்டனையை ஆறு மாதங்களுக்குள் ரத்து செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஜனவரி 7 முதல் நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதியை நிரூபித்தால் மூவரும் அடுத்து வருகிற ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.