ஆசியா கோப்பையை வெல்ல சிஎஸ்கேவின் வியூகம் தான் உதவியது - தசுன் ஷனகா!
2021ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே முதலில் களமிறங்கித்தான் கோப்பையை வென்றார்கள். இதுதான் எங்களுக்கு ஊக்கம் தந்தது என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை 2022-ன் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது.துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர்கள் குஷல் மெண்டிஸ் 0 , நிஷங்கா 8 ஆகியோர் சொதப்பினர். மற்ற டாப் வரிசை வீரர்களும் சொதப்பியதால் இலங்கை அணி 58/5 எனத் திணறியது. அடுத்து ராஜபக்சா 71 காட்டடி அடித்து அசத்தினார். தொடர்ந்து ஹசரங்கா 36 ரன்களை சேர்த்ததால் இலங்கை அணி 20 ஓவர்களில் 170/6 ரன்களை எடுத்தது.
Trending
இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர் முகமது ரிஸ்வான் 55, இப்டிகார் அகமது 32 ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். பாபர் அசாம் 5 உட்பட மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147/10 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. இலங்கை தரப்பில் மதுஷன் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா,‘‘அமீரகத்தில் டாஸை இழந்த உடனே, போட்டியை இழந்த மாதிரியான மனநிலை முன்கூட்டியே வந்துவிடும். ஆனால், நாங்கள் அப்படியிருக்கவில்லை. பார்வையாளர்கள் எங்களுக்கு பெரும் அளவில் ஆதரவு தந்தார்கள். மேலும், 2021ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே முதலில் களமிறங்கித்தான் கோப்பையை வென்றார்கள். இதுதான் எங்களுக்கு ஊக்கம் தந்தது. அவர்களைப் போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஹசரங்கா, ராஜபக்சா, கருணரத்னே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.
160+ ரன்களை இலக்காக வைத்திருந்தால் அது சேஸ் செய்யக் கூடியதாகத்தான் இருந்திருக்கும். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்ததால் 170 ரன்களை எட்டினோம். மனரீதியில் 170 என்பது பெரிய ஸ்கோராகத்தான் தெரியும். இன்று 100 சதவீத உழைப்பை கொடுத்து வென்றுள்ளோம்’’ எனத் தெரிவித்தார். ஆட்ட நாயகன் விருது ராஜபக்சாவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாகயன் விருதினை வநிந்து ஹசரங்கா தட்டிச் சென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now