அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் மற்றும் கேட் கார்மைக்கேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் பால் ஸ்டிர்லிங் தனது விக்கெட்டை இழக்க, 59 ரன்களில் கேட் கார்மைக்கேலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டரும் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த கர்டிஸ் காம்பேர் - லோர்கன் டக்கர் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் காம்பெர் 44 ரன்களிலும், லோர்கன் டக்கர் 41 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.