
இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தான். இளம் தலைமுறை பந்து வீச்சாளர்களிடம் நீங்கள் யாரை போன்று பந்து வீசி விரும்புகிறீர்கள் என்று கேட்டால், சந்தேகமின்றி வாசிம் அக்ரமை தான் கூறுவார்கள்.
நேர்த்தியான யார்க்கர் வீசுவது, பந்தை ஸ்விங் செய்வது என இவரை மிஞ்சிய நபர் இல்லை என்று சொல்லலாம். 1984 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் வாசிம் அக்ரம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.
அன்றிலிருந்து 2003ஆம் அண்டு வரை சுமார் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாட்டை தனது அபாரமான பந்துவீச்சால் கட்டிப்போட்டார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டியில் 414 விக்கெட்டுகளையும் , 356 ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.