
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் 2013 க்குப் பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லவே இல்லை என்கிற சோக வரலாறும் தொடர்கிறது.
இந்நிலையில், சமூகவலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் தோனியை புகழ்ந்து எழுதி வருகின்றனர். இப்போதைய வீரர்கள் ஒரு கோப்பையை வெல்லவே தடுமாறும்போது தோனி ஒற்றை ஆளாக மூன்று கோப்பைகளை வென்று கொடுத்தார் என்பது ரசிக கருத்துகளின் அடிப்படையாக இருக்கிறது. இப்படியாக ரசிகர் ஒருவர் தோனி குறித்து பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றிற்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்திருக்கிறார்.
2007 உலகக்கோப்பை வெற்றியைக் குறிப்பிட்டு, 'அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட இல்லை. அனுபவ வீரர்கள் ஆடுவதற்கே முன் வரவில்லை. அப்படி ஒரு சூழலில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே கொண்டு ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி தோனி உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.' என அந்த ரசிகர் பதிவிட்டிருந்தார்.