
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணி ஏற்கனவே லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதால், சூப்பர் 4 சுற்றிலும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 181/7 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்களை அடித்தார்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் 71, நவாஸ் 42 இருவரும் ஆட்டமிழந்த பிறகு, கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அப்போது ஆசிப் அலி, குஷ்டில் ஷா இருவரும் களத்தில் இருந்தார்கள். இந்த இருவரில் ஒருவரை வீழ்த்தினாலும் இந்தியாதான் ஜெயிக்கும் எனக் கருதப்பட்டது.
அந்த சமயத்தில் ரவி பிஷ்னோய் வீசிய 18ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆசிப் அலி அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு கேட்ச் கொடுத்தார். ஷார்ட் தேர்டு மேன் திசையில் மிகமிக எளிய கேட்ச்தான். அதனை அர்ஷ்தீப் சிங் பிடிக்கவில்லை. வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஆசிப் அலி, குஷ்டில் இருவரும் சேர்ந்து அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக 19 ரன்களை சேர்த்தனர். இதனால், கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டுமே அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. பாகிஸ்தான் வென்றது.