நான் ஸ்ரீசாந்திடம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்
நான் அவசரப்படாமல் பொறுமையுடன் இருந்திருந்தால் ஸ்ரீசாந்துக்கு அந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் வரலாற்றில் இந்தியா கண்டெடுத்த ஒரு மகத்தான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ள அவர் 2007, 2011 ஆகிய உலகக் கோப்பைகளை வென்ற இந்திய அணியில் சுழல் பந்துவீச்சு துறையில் துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.
அதேப்போல் ஐபிஎல் தொடரிலும் மும்பை, சென்னை போன்ற அணிகளில் விளையாடி சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள அவர் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு சாதித்துள்ளார். இருப்பினும் அவரது வாழ்நாளில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமன்சை குரங்கு என திட்டி சர்ச்சையில் சிக்கிய அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய கருப்பு புள்ளியை ஏற்படுத்தினார்.
Trending
அதைப்போல் ஐபிஎல் தொடரில் அதுவும் முதல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்து மேலும் ஒரு சர்ச்சையை உண்டாக்கினார். ஆம் மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய ஒரு போட்டியின் முடிவில் ஸ்ரீசாந்த் அழுது கொண்டிருந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதனால் பஞ்சாப் உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உட்பட பஞ்சாப் அணியினர் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது ஹர்பஜன் சிங் தம்மை கன்னத்தில் அறைந்ததாக அழுது கொண்டே தெரிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனெனில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூட வெளிநாட்டவர் என்ற நிலையில் ஸ்ரீசாந்த் சொந்த நாட்டைச் சேர்ந்தவர். மேலும் இருவரும் அதற்கு முன் 2007 டி20 உலக கோப்பையிலும் இணைந்து நாட்டுக்காக விளையாடியுள்ளார்கள். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக எல்லை மீறிய ஹர்பஜன்சிங் அவரின் கன்னத்தில் அறைந்தது ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அதனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங் எஞ்சிய ஐபிஎல் தொடரில் மொத்தமாக தடைசெய்யப்பட்டதால் ஷான் பொல்லாக் மும்பையின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின் மேலும் பகையை வளர்க்காமல் நட்பு பாராட்டிய அவர்கள் இந்தியாவிற்காக இணைந்து விளையாடி குறிப்பாக 2011 உலக கோப்பையில் மீண்டும் சேர்ந்து விளையாடி நண்பர்களாகி விட்டார்கள். அந்த மோசமான தருணம் நிகழ்ந்து 15 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அந்த குறிப்பிட்ட நாளில் தன் மீதுதான் தவறு என்று ஹர்பஜன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நாளில் அவசரப்படாமல் பொறுமையுடன் இருந்திருந்தால் ஸ்ரீசாந்துக்கு அந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“என்ன நடந்ததோ அது தவறானது. நான் ஒரு தவறு செய்துவிட்டேன். என்னால் சக வீரர் ஒரு சங்கடத்தை சந்திக்க நேரிட்டது. அதற்காக நான் வெட்கப்பட்டேன். எனது வாழ்நாளில் ஒரு தவறை நான் சரி செய்திருக்க வேண்டும் என்றால் அது களத்தில் ஸ்ரீசாந்தை அப்படி நடத்தியதாக இருக்கும். அன்று அது நடந்திருக்கக் கூடாது. அதை நினைக்கும்போது தேவையில்லாதது என்று இப்போது உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now