
சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடுவரிசை பேட்டர்களான சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரிடையே போட்டி இருந்தது. இருப்பினும் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.