
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கழற்றி விட்டு தேவையான வீரர்களை தக்க வைத்து இறுதிக்கட்ட பட்டியலை நேற்று சமர்ப்பித்தது. இதற்கிடையே சில அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் முறையில் வாங்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன.
அதில் குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் மும்பை அணியில் தம்முடைய ஐபிஎல் பயணத்தை தொடங்கிய அவர் மிகச் சிறப்பாக விளையாடி 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
ஆனாலும் அதன் பின் காயமடைந்து தடுமாறியதால் மும்பை நிர்வாகம் தக்க வைக்க தவறிய அவரை குஜராத் நிர்வாகம் 15 கோடி என்று பெரிய தொகைக்கு வாங்கி கேப்டனாகவும் அறிவித்தது. அதில் முதல் சீசனிலேயே சிறப்பாக விளையாடிய பாண்டியா கோப்பையை வென்று கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை குஜராத்தை அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார்.