
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்ச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (1), ரோஹித் சர்மா (17) மற்றும் விராட் கோலி (17) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 71 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 42.1 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.