
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பரபரப்பாக நடைபெற்று நேற்று மான்செஸ்டர் நகரில் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் நேற்றைய கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 259 ரன்களை குவித்தது.
பின்னர் 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. ஆனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் அணியின் இளம் ஆல் ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஆகியோரது ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதோடு வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றது.
இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த வேளையில் ரிஷப் பண்ட் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து 125 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரினை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் பந்துவீச்சில் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் 71 ரன்கள் அடித்து அசத்தினார்.