
தென் ஆப்பிரிக்காவை தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டுவரும் இந்தியா முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து திணறி வருகிறது. டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 212 ரன்களை அசால்டாக சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் 149 ரன்கள் இலக்கை எளிதாக சேஸிங் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 40 (35) இஷான் கிசான் 34 (21) தினேஷ் கார்த்திக் 30* (21) ரன்களை எடுத்தனர். அதை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4, பிரிட்டோரியஸ் 4, வேன் டெர் டுஷன் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை புவனேஸ்வர் குமார் காலி செய்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார்.
ஆனால் குயின்டன் டி காக்க்கு பதில் முதல் முறையாக விளையாடிய ஹென்றிச் க்ளாசென் மிடில் ஓவர்களில் சரவெடியாக பேட்டிங் செய்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார். அவருடன் கேப்டன் பவுமா 35 (30) டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 – 0* (5) என வலுவான முன்னிலை பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை பிரகாசப் படுத்தியுள்ளது.