
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்காக ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் மற்றும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் என அனைத்து பட்டியலையும் வெளியிட்டு விட்டனர்.
முன்னதாக டிரேடிங் மூலமாகவும் சில வீரர்கள் அணி மாற்றம் செய்து கொண்டனர். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் மூலம் அவர்களது அணியில் இணைத்துள்ளது.
கேப்டன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர் என அனைத்து துறைகளிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஹார்டிக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதே உண்மை. இந்நிலையில் அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஹார்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.