
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சீசன்களில் இடம்பெற்று, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. மும்பை அணிக்காக அவர் வெளிப்படுத்திய ஆல் ரவுண்டர் திறமைதான் இந்திய அணியில் பாண்டியா இடம்பெறுவதற்கு முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
கடந்த 2022 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியை சிறப்பாக வழி நடத்தினார். அந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதால் அவரது புகழ் உச்சத்திற்கு சென்றது. தொடர்ந்து இந்தியாவின் டி20 அணிக்கான கேப்டனாகவும் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
நடந்து முடிந்த சீசனில் குஜராத் அணி இறுதி போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியடைந்தது. கடந்த சில நாட்களாக பாண்ட்யா மும்பை அணிக்கு திரும்புவார் என்று தகவல்கள் பரவின. இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். இந்த சூழலில், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்திருந்தது.