சூர்யகுமார் விளையாடும் விதம் தான் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கயானா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக பிரண்டன் கிங் 42 ரன்களையும், ராவ்மன் பவல் 40 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் குறித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூரியகுமார் யாதவ் 83 ரன்களையும், திலக் வர்மா 49 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 20 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது தற்போது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் உள்ளது.
Trending
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் பாண்டியா கூறுகையில், “அடுத்த இரண்டு போட்டிகள் மிகவும் த்ரில்லிங்காக இருக்கப்போகிறது என்று நாங்கள் பேசிக் கொண்டோம். அதோடு இரண்டு வெற்றியோ அல்லது இரண்டு தோல்வியோ எங்களது நீண்டகால திட்டத்தில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.
நாங்கள் கட்டாயம் ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் ரெடியாக இருக்கிறோம் என்பதை இந்த போட்டியின் மூலம் காண்பித்துள்ளதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரான் விரைவாக பேட்டிங் செய்ய வராதது எங்களது வேகப்பந்து வீச்சாளர்களை தக்க வைக்க முடிந்தது. அதோடு ஸ்பின்னர்களையும் அதற்குள் நாங்கள் பயன்படுத்தி விட்டோம்.
பூரான் அடிக்க வேண்டும் என்றால் என்னுடைய பந்துவீச்சை அடிக்கட்டும் அதுதான் எங்களுடைய திட்டம். நான் இதுபோன்ற சவால்களை மிகவும் விரும்புகிறேன். நிச்சயம் நான் பேசுவதை அவர் கேட்டுக்கொண்டு அடுத்த போட்டியில் எனது பந்துவீச்சுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைக்கிறேன். இந்த போட்டியில் ஏழு பேட்டர்களுடன் தான் இலக்கை துரத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அதன்படி இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. இது போன்ற போட்டிகளில் சூரியகுமார் விளையாடும் விதம் தான் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now