
உலகக்கோப்பை தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்ததால் பாகிஸ்தான் சீக்கிரமாக அந்த அணியை ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலைமையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் 31 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதில் குறைந்த ரன்களில் இருந்த போதே கொடுத்த எளிதான கேட்ச்சை தவற விட்ட ஷாஹீன் அஃப்ரிடி ஒரு வழியாக 84 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸை கிளீன் போல்ட்டாக்கி மறுபுறம் சவாலை கொடுத்த ஜோ ரூட்டையும் 60 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் வந்த ஹரி ப்ரூக் 46ஆவது ஓவரில் ஹரிஷ் ரஃவூபை 6, 2, 4, 1, 1, 6 என அதிரடியாக எதிர்கொண்டு 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.