-lg1-mdl.jpg)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரதிகா ராவலுடன் இணைந்த ஹர்லீன் தியோலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த நிலையில், 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.