யாருமே பார்க்காததால் இந்த விவகாரம் தேவையில்லாதது - ஹர்ஷா போக்லே பதிலடி
விராட் கோலி ஃபில்டிங் செய்யும் போது பந்தை எரிந்தது போல் ஏமாற்றியதாக வங்கதேச கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டியதை எடுத்து ஹர்ஷா போக்லே பதில் பதிவை வெளியிட்டுள்ளார்.
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் விராட் கோலி ஃபில்டிங் செய்யும் போது பந்தை எரிந்தது போல் ஏமாற்றியதாக வங்கதேச கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டி உள்ளது.
இது ஐசிசி விதிப்படி தவறு என்பதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரன்கள் நடுவர்கள் தரவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் அணி புகார் கூறி உள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை விராட் கோலி பிடித்து வீசுவது போல் செய்ததாக வங்கதேசம் கூறுகிறது.
Trending
ஆனால் பந்து விராட் கோலி அருகில் தான் வந்தது என்றும் அதனை பிடிக்க தயாராக இருந்த விராட் கோலி பந்து தம் அருகில் சென்று விட்டதால் அதனை எறிவது போல் சாதாரணமாக தான் கையை சுத்தினார். இது குறித்து களத்தில் இருந்த நடுவர்களும் பேட்ஸ்மேன்களும் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் தோல்வி அடைந்த பிறகு இதனை ஒரு காரணமாக வங்கதேசம் தூக்கிக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே வெளியிட்ட பதிவில், “ஃபில்டிங் செய்யும் போது விராட் கோலி ஏமாற்றியதாக கூறப்படும் நிகழ்வை யாருமே கவனிக்கவில்லை என்பதுதான் உண்மை. நடுவர்களும் பார்க்கவில்லை, அதனை பேட்ஸ்மேன்களும் கவனிக்கவில்லை. போட்டியை பார்த்த மக்களும் அதனை பார்க்கவில்லை.
ஐசிசி 41.5 விதியின் படி ஃபில்டிங் செய்யும் போது பந்தை எறிவது போல் நாடகம் ஆடினால் அதற்கு ஐந்து ரன்கள் பெனால்டி தரலாம். ஆனால் அதனை நடுவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் யாருமே பார்க்காததால் இந்த விவகாரம் தேவையில்லாதது. இதே போன்று ஆடுகளம் ஈரமாக இருப்பதாக யாரும் புகார் செய்யவில்லை. ஷகிபுல் ஹசன் கூட ஆடுகளம் ஈரமாக இருந்தால் அது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும் என்று கூறினார்.
நடுவர்களும், ஆடுகள பராமரிப்பாளர்களும் போட்டியை தொடர அவர்களால் என்ன முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்தார்கள். இதனால் ஆட்டத்தில் சில ஓவர்கள் தான் குறைக்கப்பட்டது. எனவே வங்கதேசத்தில் இருக்கும் நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஃபேக் பில்டிங் அல்லது ஈரப்பதமான மைதானம் ஆகியவற்றை தோல்விக்கு காரணமாக சொல்ல வேண்டாம்.
உங்களுடைய பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் போட்டி முடியும் வரை நின்று இருந்தால் வங்கதேசம் எளிதாக வென்றிருக்கும். நாம் காரணங்களை தேட ஆரம்பித்து விட்டோம் என்றால் நம்மால் வளர முடியாது” என்று ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now