
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹம்பந்தொட்டையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு விஷ்மி குணரத்னே - சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அத்தபத்து 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 24 ரன்களைச் சேர்த்திருந்த விஷ்மி குணரத்னேவும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய துலானி 6 ரன்களுக்கும், ஹர்ஷிதா மாதவி 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் மீண்டும் தொடங்கிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 99 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.