
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 7ஆம் தேதி டவுன்டவுனில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தொடரை வென்ற உத்வேகத்துடன் உள்ள இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியிலும், மறுபக்கம் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்யும் முயற்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர ஆல் ரவுண்டருமான ஹீலி மேத்யூஸ் தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.