AUSW vs WIW 2nd T20I: ஹைலி மேத்யூஸ் மிரட்டல் சதம்; ஆஸியை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை செலுத்தியது.
Trending
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலீசா ஹீலி முதல் பந்தலிலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார். பெத் மூனி 29 பந்துகளில் 22 ரன்கள், தாஹிலா மெக்ராத் 4, ஆஸ்லி கார்டனர் 2 என முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் வெளியேறினார்கள். இதையடுத்து ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெரி மற்றும் லிட்ச்ஃபீல்டு இருவரும் அதிரடியான பேட்டிங்கில் மிரட்டினார்கள்.
இதில் எல்லிஸ் பெரி 46 பந்தில் 70 ரன்களையும், லிட்ச்ஃபீல்டு 19 பந்துகளில் 52 ரன்கள், கடைசிக்கட்டத்தில் ஜார்ஜியா வர்ஹாம் 13 பந்தில் 32 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹைலி மேத்யூஸ் 3 விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ஹைலி மேத்யூஸ் அதிரடியில் மிரட்டினார். 64 பந்துகளை சந்தித்த அவர் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 132 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக மூத்த வீராங்கனை ஸ்டெஃபானி டெய்லர் 41 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹைலி மேத்யூஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சில சாதனைகளையும் படைத்துள்ளது. அதன்படி சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். மேலும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஹைலி மேத்யூஸ் ஆட்டநாயக விருது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now